கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்து முறையான அறிவிப்பு இல்லை - பொதுமக்கள் வேதனை

Jun 20, 2021 09:07 AM 410

கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்த முறையான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடாததால், நாள்தோறும் தடுப்பூசி மையங்களுக்கு வந்து பொதுமக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில், தொடக்கத்தில் நாள்தோறும் 800 தடுப்பூசிகள் வரை செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு நூறு பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி மையங்களில் நீண்ட நேரம் காத்திருப்புக்கு பிறகு 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுவதால், இங்கு வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழ்நிலை நிலவுகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்த முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்துவதை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மருத்துவ ஊழியர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாள்தோறும் 250 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர், காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது, ஒரு சிலர் ஆத்திரமடைந்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் சாவடிபாளையம், நத்தகாடையூர், சத்யா நகர் அரசு மருத்துவமனைகளில் அதிகாலை 3 மணிக்கே வந்து காத்துக்கிடக்கும் போதிலும், தடுப்பூசி போடப்படுவதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். இதனால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில், கொரோனா தடுப்பூசிக்காக விடிய விடிய நீண்டவரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். ஈரோடு மாவட்டத்திற்கு 19 ஆயிரத்து 400 தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்ட நிலையில், பல்வேறு மையங்களில், பொதுமக்கள் நள்ளிரவிலேயே முந்தி அடித்துகொண்டு காத்திருந்து தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு தடுப்பூசிகள் மையங்களிலும் நாள் ஒன்றுக்கு 100 பேர் முதல் 200 பேருக்கும் மட்டுமே தடுப்பூசிகள் இருப்பு வைத்து போடப்படுகின்றன. இதனால், பல மணிநேரம் காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசி இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Comment

Successfully posted