கரும்புகை கக்கும் ஆலை... கவலையில் சிக்கும் மக்கள்

Jul 19, 2021 11:46 AM 2769

திருப்பூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆலை கழிகவுகளால் அப்பகுதி வாசிகள் படும் அவதிகள் குறித்து எடுத்துரைக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் ஏராளமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன். அதேபோல் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.கடந்த சில நாட்களாக ஈஸ்டர்ன் என்ற தனியார் பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அதிகளவு கரும்புகை வெளியேறி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கரும்புகையானது, வீடுகள், தோட்டம் மற்றும் வாகனங்களில் துகள்களாக படிகிறது. இதன் காரணமாக அப்பகுதி வாசிகளின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுத்தகரிப்பு நிலையத்தில் விறகுகளை எரிப்பதால் கரும்புகை சூழ்ந்து முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனை ஏற்படுவதாகவும் கரித்தூள்கள் தோல்களில் படுவதால் தோல் சார்ந்த பிரச்னைகளை சந்திக்க நேர்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என குற்றம் சாட்டும் மக்கள், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் புகை வெளியேற்றப்படுகிறா என மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Comment

Successfully posted