மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று.

Feb 19, 2021 07:52 AM 5894

முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிகாலம் தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என கருதப்படுகிறது. இத்துனை சிறப்பு பெற்ற சத்ரபதி சிவாஜியின் 393-வது பிறந்தநாள் இன்று.

சத்ரபதி சிவாஜி என்று அழைக்கப்படும் சிவாஜி ராஜே போன்ஸ்லே, முகலாயர் ஆட்சி காலமான 1627ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19-ம் தேதி புனேவில் உள்ள சிவநேரி கோட்டை என்ற இடத்தில் சஹாஜி - ஜிஜாபாய் ஆகியோருக்கு இளைய மகனாக பிறந்தார். இளமையிலேயே ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாச காவியங்களை கற்றறிந்து, சிறந்த வீரராகவும் திகழ்ந்தார்.

1645-ம் ஆண்டு பீஜபூர் பேரரசிடம் இருந்து தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றிய சிவாஜி, 1647ல் கொண்டனா மற்றும் ராஜ்காட் கோட்டையையும் கைப்பற்றினார். புனேவில் பல இடங்களை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த அவர் மராட்டிய பேரரசை விரிவுபடுத்தினார்.

1661 ஆம் ஆண்டு கொங்கன் பகுதியில், முகலாயப் படை தளபதி கர்தாலாப் கானுடன் நடைபெற்ற போரில் மாபெரும் வெற்றி கண்ட சிவாஜி, போர்களத்தில் தந்திரமான முறையில் போர் செய்யும் “கொரில்லா போர்” முறையை பயன்படுத்தி எதிரிகளை வென்று வந்தார்.

1674 ஆம் ஆண்டு ராய்கட் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்ட சிவாஜி, தென்னிந்திய பகுதிகளின் மீது தன்னுடைய கவனத்தை திருப்பியதன் மூலம் வேலூர் மற்றும் செஞ்சி கோட்டைகளையும், ஆர்காட்டையும் கைப்பற்றினார்.

சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி, அரசருக்கு ஆலோசனை வழங்க 8 அமைச்சர்கள் கொண்ட "அஷ்டபிரதான்" என்ற அமைப்பை ஏற்படுத்தினர். நிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும், ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வரிவசூல் நடவடிக்கைக்காக பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார் சிவாஜி.

அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராக சத்ரபதி சிவாஜி திகழ்ந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மாமன்னர் சிவாஜி, 1680 ஆம் ஆண்டு தனது 53வது வயதில் காலமானார்.

image

மொகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த சத்ரபதி சிவாஜியை இந்திய மக்களால் இன்றளவும் போற்றுகின்றனர் என்பது, அவரது வீரத்திற்கும், பெருமைக்கும் சான்றாக விளங்குகிறது.

 

Comment

Successfully posted