2020க்கான வேதியியல் நோபல் பரிசு - தட்டிச்சென்ற 2 பெண் விஞ்ஞானிகள்

Oct 07, 2020 06:36 PM 1340

2020ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த இரண்டு தினங்களில் மருத்துவம், இயற்பியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு வெற்றியாளர்களின் பெயர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு ஆராய்ச்சிக்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுலா சர்பாஞ்சே மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் டவுட்னா ஆகிய இருவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீன் எடிடிங் தொழில்நுட்பத்தை இந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகளின் மரபணுக்களைக் கூட மிகத்துல்லியமாக மாற்ற முடியும். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நோபல் தேர்வுக்குழு, இந்த கண்டுபிடிப்பு, புற்று நோய் சிகிச்சைக்கு பேருதவி புரிந்து பலரது கனவுகளை நனவாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதே போன்று, 8ஆம் தேதி இலக்கியம், 9ஆம் தேதி அமைதி, 10ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Comment

Successfully posted