சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்.? - சி.பி.ஐ.-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Sep 18, 2020 10:01 PM 480

சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கில் ஜாமீன் கோரியுள்ள காவலர்கள் மனுவுக்கு, சி.பி.ஐ. தரப்பில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள காவலர்கள் முருகன், தாமஸ், பிரான்சிஸ், முத்துராஜா ஆகியோர் ஜாமீன் வழங்க கோரி இரண்டாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், "வழக்குத் தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்துவிட்ட நிலையில், விசாரணையும் முடிவடைந்ததால் தங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, கைது செய்யப்பட்டு 80 நாட்களை கடந்து விட்டதால் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு முடிய இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது குறித்து சிபிஐ தரப்பில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை செப்டம்பர் 28 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comment

Successfully posted