திருச்சியில் பட்டபகலில் இளைஞர் வெட்டி படுகொலை

Jan 23, 2020 05:44 PM 700

திருச்சியில் பட்டபகலில் இளைஞரை வெட்டி படுகொலை செய்தவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த ஜிம் மணி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செந்தில், மற்றும் புகழேந்தி என்பவர்களுக்கும் கடந்த ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதில், செந்தில், புகழேந்தி ஆகிய இருவரும் ஜிம் மணியை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜிம் மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து செந்தில், புகழேந்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 13ம் தேதி ஜாமீனில் வெளிவந்த புகழேந்தி காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வந்துள்ளார். அப்போது மர்மநபர்கள் புகழேந்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் புகழேந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்ட ஜிம் மணியின் சகோதரர் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் பழிக்குப் பழியாக, இக்கொலை சம்பவத்தை நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted